Monday, December 04, 2006

சீன வானொலி சிகரம் தொட வாழ்த்துக்கள்!

அமெரிக்க சீன வானொலி நேயர்

மன்றத்தின் வாழ்த்து மடல்!

அனைவருக்கும் எனதினிய வணக்கத்தை
இங்கு பதிவு செய்வதில் மகிழ்வெய்துகிறேன்!

சீன வானொலி நிலைய வழிநடைப் பயணத்தில் இது ஒரு மைல் கல்!

வானொலி வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய தருணம் இது!

அது கடந்த பாதைகளை திரும்பிப் பார்க்கும் போது அதன் துவக்கமும் இன்றைய
பிரம்மாண்ட வளர்ச்சியும் நம் கண்களில் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.
சீன வானொலியின் 65ம் ஆண்டுவிழா!

பீகிங் வானொலியாய் உதயமாகி
BE-KING போல உலக வானொலிகளின்
அரசனாக வீர நடைபோட்டு
43 மொழிகளில்....38 அந்நிய மொழிகளில்
அட்டகாசமாய் உலகை வலம்வருகிறது!

உலக நேயர்களிடமிருந்து வரும் நேயர் கடிதங்களின்
எண்ணிக்கை உலகின் வேறு எந்த வானொலிக்கும் வராத
மிக அதிக அளவில் வந்து குவிகின்றது. இதுவே அதன் பலம்!

அதன் வெற்றி! சீன வானொலியின் ஒலிபரப்புப் பணியில்
இது ஒரு சரித்திரச் சாதனை மைல் கல்!

சீன வானொலி துவக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்குப்
பின் தமிழ் பிரிவு துவக்கப்பட்டு 43 விழுதுகள் விட்டு
பழுதுகள் இல்லாமல் பணி தொடர்கிறது என்றால்
சீன வானொலிக்கும் அதன் நேயர்களுக்கும் இடையே
உள்ள உறவானது மிகப்பலம்பொருந்தியது என்பது
எவரும் மறுக்கவியலாதது.

43 விழுதுகளில் தமிழுக்காகவும் ஒரு விழுது கிடைத்ததில்
தமிழன் என்ற வகையில் மிகப் பெருமிதம் கொள்கிறேன்.

கடல் கடந்து வந்தாலும் இந்த உணர்வே என்னை இங்கும்
ஒரு மன்றம் ஏற்படுத்தி சீன வானொலிச் சேவையை
செவிமடுக்க வைக்க தூண்டுகோலாய் அமைந்தது. தாய்த்
தமிழகத்தில் கிளைவிட்டு முளைவிடும் நேயர்மன்றங்களுக்கும்
இணையத்தில் ஒரு பக்கத்தை ஏற்படுத்தித் தந்து சீன
வானொலிக்கும் நேயர்மன்றங்களுக்கும் இடையே ஒரு
உறவுப் பாலத்தை நிறுவிட உத்வேகம் தந்துள்ளது.
சீன வானொலியின் வெற்றியின் ரகசியம்தான் என்ன?

அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறவர்கள் சீன வானொலி
தமிழ் பிரிவில் பணியாற்றுவோர்!

தமிழ் செய்தி வாசித்தால் மட்டும் போதாது!
தமிழ் நிகழ்ச்சிகள் அளித்தால் மட்டும் போதாது;
தமிழர்களாகவே மாறி அவர்களோடு இரண்டறக்
கலந்து அவர்கள் இதயம் நுழைந்து இதமாய்
செய்திகள் தரவேண்டும் என்ற முனைப்போடு
தங்கள் சீனப் பெயர்களை அழகான தமிழ்ப்
பெயர்களைத் தேர்ந்தெடுத்து
அதையே தங்களுக்கு சூட்டிக்கொண்டு
தமிழ்செல்வமாகவும் கலையரசியாகவும் வாணியாகவும் கலைமகளாகவும்
வலம் வருகிற பொற்பாதங்களை இங்கிருந்தே தொட்டு வணங்குகிறேன்.

சீன வானொலி தமிழ் பிரிவு வானொலி தமிழர்க்கு கிடைத்த தவம்!
தமிழ் வானொலி ரசிகர்களுக்கு கிடைத்த வேதம்!
தமிழர்களின் ஈடிணையில்லா கீதம் அது!
தமிழர்களின் நாடி நரம்புகளின் நாதம் அது!

எங்கள் உணர்வுகளுக்கு உயிராய் உணவாய் உலாவரும்
சீன வானொலி 66ம் ஆண்டில்
அடியெடுத்து வைக்கும் இத் தருணத்தில் எங்கள்
அமெரிக்க மன்றத்தின் சார்பில் வாழ்த்துவதோடு,
சீன வானொலி இயக்கத்துக்கு பக்கபலமாய் இருக்கும்
அதன் இயக்குனர்,
தமிழ் பிரிவுத் தலைவர்
திருமதி.கலையரசி அவர்கள் உட்பட
அனைத்து அலுவலர்களுக்கும் எமது
மன்றத்தின் சார்பில்
வாழ்த்துப் பூக்களைத் தூவி மகிழ்கின்றோம்!
சீன வானொலி சிகரம் தொட என்னிதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

இப்படிக்கு.
சி.எஸ்.ஆல்பர்ட் பெர்னாண்டோ,
தலைவர்,
அமெரிக்க சீன-தமிழ் வானொலி நேயர் மன்றம்.
அமெரிக்கா.

No comments: