Monday, May 29, 2006

செய்திகள்

சீனாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் 2 கோடி பேர்...!

பெய்ஜிங், மே 29: சீனாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை 25 கோடியில் இருந்து 2 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரமாகக் குறைந்துள்ளதாக சீன துணை அதிபர் ஹுயி லியாங்யூ கூறியுள்ளார்.

பெய்ஜிங் நகரில் நடைபெற்ற வறுமை ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கில் சீன துணை அதிபர் ஹுயி லியாங்யூ உரையாற்றினார். அவர் கூறியது:

வறுமை ஒழிப்பு, சீனாவுக்கு நீண்டகால சவாலாக இருந்து வருகிறது.

கிராமப்புறங்களில் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வறுமைக்
கோட்டுக்கு கீழே வாழ்ந்து வருகிறார்கள். எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வறுமைக்கு எதிராக சீனா கடுமையாகப் போராடவேண்டியுள்ளது.

இதற்காக வறுமை ஒழிப்பில் பங்கேற்குமாறு வர்த்தகம் உள்ளிட்ட பிற துறையினரை அரசு ஊக்குவிக்கும். மேலும் அரசு சார்பிலும் அதிக நிதி ஒதுக்கப்படும் என்றார்.

1986ல் இருந்து சீனா வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

சீனாவில் 1978ல் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்தவர்கள் 25 கோடி பேர். இது 2004ல் 2 கோடியே 60 லட்சமாகக் குறைந்தது. இக் காலகட்டத்தில் மொத்த கிராமப்புற மக்களில் பரம ஏழைகளின் சதவிகிதம் 30.7 ல் இருந்து 3.1 ஆகக் குறைந்ததாக புள்ளிவிவரம் கூறுகிறது.

No comments: